கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) — கேமரன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்படுவதால் அதனை தடுக்கும் உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
கேமரன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் பல நடந்தாலும், இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது புலப்படுவதாக அதன் தலைவர் மீனாட்சி இராமன் தெரிவித்துள்ளார்.
கேமரன் மலையில் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் தொடர்ச்சியான மழைப்பொழிவைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் மற்றும் சரிவுகள் ஏற்படுகின்றன.
தொடர் மழை மட்டுமே இது போன்ற நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாக இருக்காது என்று அவர் கூறுகிறார்.
மேலும், விவசாய நடவடிக்கைகளுக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைக்காக நிலம் பயன்படுத்தப்பட்டால் அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மலைப்பகுதிகளில் ஏற்படும் வளர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், அடிக்கடி கண்காணிக்கவும், ஏற்கனவே உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உறுதியாக அமல்படுத்தவும் இதுவே சரியான நேரம் என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று மீனாட்சி அறிவுறுத்தினார்.
அண்மையில், கேமரன் மலைக்குச் செல்லும் சிம்பாங் பூலாய் – புளூ வேலி சாலையில் 34-வது கிலோ மீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் மரணமடைந்திருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனாட்சி கேட்டுக் கொண்டார்.