கோலாலம்பூர், 4 டிசம்பர் (பெர்னாமா) — நாட்டில் இந்தியர்கள் ஈடுபட்டு வரும் பல தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறைப் பிரச்சனை பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பே அந்நிய தொழிலாளர்களின் பற்றாக்குறையினால் இந்தியர்கள் அதிகம் ஈடுபடும் மறு சுழற்சி முடி திருத்தம் நிலையம் துணிக்கடை மற்றும் விவசாயம் போன்ற துறைகள் சிரமத்தை எதிர்நோக்கி வந்தன.
தற்போது கொவிட்-19 தாக்கத்தினால் நிலைமை மோசமடைந்து இருப்பதாக மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மைக்கி தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்தார்.
“ஐந்து வருடம் முன்பு அந்நிய தொழிலாளர்கள் இதற்கு முன்பு கேட்ட பொழுது 20 ஆயிரம் தொழிலாளர்கள் கிடைத்தனர். அதை வைத்துதான் இது வரையிலும் இந்தியர்கள் அவர்களின் தொழிலைக் கவனித்துக்கொண்டனர். நாம் அரசாங்கத்திடம் இந்தியர்களின் தொழில்திறன்களை வளர்த்துக்கொள்ள சில தேவைகளைக் கேட்க வேண்டும். பொதுவாக மறு சுழற்சி முடி திருத்தம் துணிக்கடைகள் மற்றும் விவசாயம் இந்த துறைகளுக்கு எல்லாம் உதவிகளைக் கேட்டு கொண்டு தான் இருக்கின்றோம்” என்று மலேசிய இந்திய தொழிலியல் சங்கங்களின் சம்மேளன தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அந்நிய தொழிலாளர்கள் தருவிக்கப்படாததால் நாட்டின் பொருளாதாரம் ஏறக்குறைய 25 விழுக்காடு பாதிப்படைந்திருப்பதைச் சுட்டிக் காட்டிய டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் நாட்டில் பொருட்களின் விலை உயர்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருப்பதாக குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் தங்கள் தரப்பு மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணினிடம் கோரிக்கையை முன் வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“நம் மாண்புமிகு அமைச்சர் எம்.சரவணன் அவர்கள் இதற்கு முழுமையாக ஆதரவினை வழங்குகின்றார். இப்பொழுது, மக்களவையிலும் இதனையொட்டி பேசியதாக எம்.சரவணன் குறிப்பிட்டார். அரசாங்கத்தினுடைய ஆதரவும் நமக்கு கிடைக்கின்றது இருந்தபோதிலும், இந்த கொவிட்-19 மற்றும் ஒமிக்ரோன் காலக்கட்டத்தில் எப்படி அந்நிய தொழிலாளர்களின் வருகையைச் சீர்ப்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கமும் உதவி செய்ய தயாராக இருக்கின்றது” என்று டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
எனினும் இவ்விவகாரத்தில் அனைத்துலக எல்லைப்பகுதி திறப்பது உட்பட இதர சில அம்சங்களும் உட்படுத்தி இருப்பதை தங்கள் தரப்பு அறிந்திருப்பதாக அவர் கூறினார்.
அரசாங்கமும் இந்த அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்சனைக் குறித்து அமைச்சரவையில் விவாதித்து வரும் வேளையில் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மைக்கி இந்திய சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு நிதி உதவி மட்டுமல்லாது பல வழிகளிலும் உதவி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் மைக்கி ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செயல்பாட்டு தரவிதிமுறை எஸ்.ஓ.பியைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் நடைபெற்ற இந்த தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
— பெர்னாமா