கோலாலம்பூர், பிப்ரவரி 11- ஆட்டிஸம் என்ற ஒரு வகை மூளை பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தம் மகனின் கனவை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பூர்த்தி செய்ததால் தாய் ஒருவர் எல்லையில்லா ஆனந்தமடைந்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை வாழ்நாள் முன்மாதிரியாகக் கொண்டுள்ள 16 வயது ரக்னேஷ்வர்குமாரின் விருப்பத்தை பிரதமர் கடந்த புதன்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பூர்த்தி செய்தார். அந்த 20 நிமிட சந்திப்பு தம் மகனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதாக 43 வயதான இந்திராணி தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை ரிக்கி என்ற ரக்னேஷ்வர்குமார் தமது தாயார், தந்தை மற்றும் அவரது 12 வயது தம்பியுடன் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இடையறாத அன்றாட அலுவல் பணிகளுக்கிடையே தனது பொன்னான நேரத்தை தம் மகனுக்காக ஒதுக்கிய பிரதமர் தம் பார்வையில் ஒரு “மாறுபட்ட மனிதராக” திகழ்வதாக தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றி வரும் இந்திராணி தெரிவித்தார்.
“அன்றாடப் பணிகளில் ஒய்வின்றி இருந்தாலும் பிரதமர் என் மகனின் எண்ணத்தை ஈடேற்றியுள்ளார். இச்சந்திப்பு எங்கள் மகனைத் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ப தயார் செய்வதற்கு எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது” என திருமதி. இந்திராணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரதமரைச் சந்தித்த போது மிகுந்த மகிழ்ச்சிடைந்த தமது மகன் அவருக்காக “ஒரே மலேசியா” பாடலை பாடிக் காட்டியதாகவும் அவர் கூறினார்.
ரிக்கி ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அவரது நான்காவது வயதில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆட்டிஸம் என்பது மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒருவகை பாதிப்பே அன்றி மனநோய் அல்ல.
தமது 8-வது வயதில் அப்போதைய துணைப்பிரதமராக டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கிய ரிக்கி பின்னர் 2009-ஆம் ஆண்டு டத்தோ ஸ்ரீ நஜீப் பிரதமராகி ஒரே மலேசியக் கொள்கையை பிரபலப்படுத்தியதும் அவர் மீது ரிக்கி மேலும் ஆர்வம் செலுத்தத் தொடங்கியதாக திருமதி. இந்திராணி தெரிவித்தார். பிரதமரின் புகைப்படங்களில் நாளிதழ், தொலைகாட்சி மற்றும் கடைகளில் காணும்போதெல்லாம் தம் மகன் மகிழ்ச்சி புன்னகை புரிவதை தாம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தம் மகன் பிரதமர் மீது அளவில்லா அன்பு வைத்திருந்தாலும், உடற்குறையுடைய தம் மகனின் நிலையை உணர்ந்து தாம் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதாக இந்திராணி குறிப்பிட்டார்.
மூன்று நாட்களுக்குப் பின்னர் பிரதமரின் அதிகாரி ஒருவர் தம்மைத் தொடர்பு கொண்டு, தாம் எழுதிய கடிதத்தைப் பிரதமர் படித்ததாகவும், தம் மகனை அவர் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்ததாக கூறினார்.
ரிக்கி தற்போது தலைநகர் தித்திவங்சா, செத்தாப்பாக்கில் அமைந்துள்ள IMPIAN எனப்படும் ஆட்டிஸம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயின்று வருவதாகவும், அவரை ஒவ்வொரு நாளும் செராசிலிருந்து அப்பள்ளிக்குக் கொண்டுச் சென்று வருவதாகவும் இந்திராணி தெரிவித்தார்.
“பிரதமருடனான சந்திப்பு எங்களுக்கு அர்த்தமிக்கதாகத் திகழ்கிறது. பிரதமருடனான இச்சந்திப்பு மூலம் இவ்வுலகில் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை என்ற உத்வேகத்தை எங்களுக்கு அளித்துள்ளது” என திருமதி. இந்திராணி நம்பிக்கையுடன் கூறினார்.